தமிழ் இசைச் சங்கம் : தோற்றம் : 1943
உலக நாடுகள் பலவற்றுள்ளும் பழமையும் நாகரீகமும் வாய்ந்த நாடுகளுள் நம் தமிழகமும் ஒன்று என்பது நமக்குப் பெருமை அளிப்பதாகும். இந்த நாட்டில்தான் இயல், இசை, நாடகம், சிற்பம், ஓவியம், கட்டடக்கலை, போன்ற நுண் கலைகள் ஆயிரமாயிரம் ஆண்டுகட்கு முன் சிறந்து வளர்ந்து வந்திருக்கின்றன.
ஆறு, ஏழு, எட்டு, ஒன்பதாம் நூற்றாண்டுகளில் தேவார மூவரும், திவ்வியப்பிரபந்தம் அருளிய ஆழ்வார்களும், முத்துத்தாண்டவர், அருணாசலக்கவிராயர், மாரிமுத்தாப்பிள்ளை, அருணகிரிநாதர், வள்ளலார், கோபாலகிருஷ்ணபாரதியார், மகாகவி சுப்ரமணிய பாரதியார், போன்ற எண்ணற்ற பெரியோர்கள் நமக்கு அளித்துச் சென்ற இசைப் பாடல்கள் பல ஆயிரம். ஆனால் இசையரங்குகளில் வேற்று மொழிப் பாடல்களே அதிகம் இடம் பெற்றன. கோவில்களில் மட்டும் ஓதுவார்களால் திருமுறை ஓதும் நிலையில் தமிழ் இசைப் பாடல்கள் பெயரளவில் இடம்பெற்றன.
இந்த நிலையைக் கண்ட செட்டிநாட்டரசர் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் தமிழ்நாட்டில் அக்காலத்தில் புகழுடன் வாழ்ந்த பெருமக்களான சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சர் டாக்டர் ஆர்.கே.சண்முகம் செட்டியார்,சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ராஜாஜி, கல்கி, டி. கே. சி., சி. என். அண்ணாதுரை போன்ற பெருமக்கள் ஆதரவுடன் தமிழிசைச் சங்கத்தினை 1943-ல் சென்னையில் நிறுவினார்கள். இதன் மூலம் செட்டிநாட்டரசர் இசையின் மேல் கொண்டிருந்த ஆர்வம் தெள்ளிதின் புலப்படும்.
"தமிழ்நாட்டில் நடைபெறும் இசையரங்குகளில் தமிழ்ப் பாடல்களே அதிகமாக இடம்பெற வேண்டும். தமிழ்நாட்டில் தமிழிசை பரவவேண்டுமென்பது வேறெந்த மொழிக்கும் இயக்கத்திற்கும் விரோதமானது அல்ல. மிக மிக நியாயமான குறிக்கோளாகும்" என்று சங்கத்தின் குறிக்கோளினை விளக்கினார்கள்.
தமிழிசைச் சங்கத்தினை 1943-ல் சென்னையில் தோற்றுவித்து இசைபரப்பும் பெருநோக்குடன் 1944-ல் ஒரு இசைக்கல்லூரியினையும் சங்கத்தின் சார்பில் தோற்றுவித்தார்கள். அரசரின் ஆவல் "தமிழ் நாடெங்கும் தமிழிசை பரவ வேண்டுமென்பதே" தம் வாழ்நாள் முழுவதும் தமிழிசை மேலும் மேலும் பரவிய வண்ணம் இருக்க வேண்டுமென எண்ணிய அரசர் சங்கத்தின் நிர்வாகத்திலும், இசை நூல்கள் வெளியிடுதல் போன்றவற்றிக்காக பெரும் பொருளை வழங்கியுள்ளார்கள்.
தந்தையைப் போன்று அவர்களின் மூத்த மகனார் ராஜா சர் முத்தையா செட்டியார் அவர்களும் தொடர்ந்து சங்கத்தின் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட பெருமகனார் ஆவார். சங்கம் தொடங்கிய நாள் முதல் தம் வாழ்நாள் முழுவதும் சங்கத்தின் துணைத்தலைவராகப் பணியாற்றிய சாதனையாளர்.
சங்கம் தொடங்கிய நாளிலிருந்து 1995 வரை அதன் மேம்பாடு கருதி 52 ஆண்டுகள் சங்கத்தின் மதிப்பியல் செயலராகப் பணியாற்றியவர் அரசர் அவர்களின் மூன்றாவது குமாரர் டாக்டர் எம்.ஏ.சிதம்பரம் செட்டியார் அவர்கள். நிகழ்ச்சிகள் துவங்குவதிலும் நிறைவடைவதிலும் நேரம் தவறாமையைக் கடைப்பிடிக்க வேண்டுமென்ற கொள்கைப் பற்றுடைய பெருமகனார்.
1995-ல் தம் தந்தையார் அறிவுரையின் பேரில் சங்கத்தின் மதிப்பியல் செயலர் பதவியை ஏற்று திறம்பட நடத்தி வருபவர் டாக்டர் ஏ.சி.முத்தையா அவர்கள்.
சங்கத்தின் நிர்வாகத்திலும் கல்லூரியின் மேம்பாட்டிலும் ஊக்கத்துடன் செயல்படுபவர். கல்லூரியின் தரத்தினை மேலும் மேலும் உயர்த்த ஆக்கப் பணிகளைத் தொடர்ந்து ஆற்றி வருபவர். கல்லூரியில் நாகசுரம், தவுல், தேவாரம் போன்ற துறையில் பயிலும் மாணவர்கட்குச் சலுகை பலவற்றைக் கல்லூரி தொடர்ந்து அளிக்க ஊக்குவிப்பவர்.