தமிழ் பண் ஆராய்ச்சி

உலகமொழிகளுள் தமிழ் மொழி மிகத் தொன்மை வாய்ந்தது. அவ்வாறே தமிழ் இசையும், முத்தமிழும் இந்த நாட்டில்தான் 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நன்கு வளர்ந்த்து வருவன. தமிழிற்குப் பழைய இலக்கணமாக அமைந்த தொல்காப்பியம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் பாலை போன்ற நிலங்களுக்குரிய யாழ் பற்றிக் கூறுகிறது.

Tamil Isai Sangam

அடுத்து இயற்றப்பெற்ற சிலப்பதிகாரம் ஒரு இசைச் சுரங்கம். இதில் இசை மற்றும் நாட்டியம் பற்றிய நுணுக்கங்கள் மிகுதியும் காணப்படுகின்றன. பல நூற்றாண்டுகட்குப் பின்னர் சிலப்பதிகாரத்திற்குப் பொருள் கண்ட அடியார்க்கு நல்லாரும் அரும்பதனாரும் இசை / நாட்டியம் பற்றி ஏராளமான குறிப்புகளை அளித்திருக்கின்றனர்.

3-ஆம் நூற்றாண்டில் காரைக்கால் அம்மையாரும் 7, 8, 9-ஆம் நூற்றாண்டுகளில் திருஞானசம்பந்தர் - திருநாவுக்கரசர் (அப்பர்) - சுந்தரர், மணிவாசகர் அருளிய தேவார, திருவாசகமும் பண்களைக் கொண்டு அமைந்தன.பன்னிரு ஆழ்வார்களின் திவ்வியப்பிரபந்தப் பாடல்கள் பண் முறைகளில் அருளிச் செய்யப்பெற்றவையே.

நம் சங்கம் இவையனைத்தையும் கருத்தில் இருத்தி தற்போது தமிழிசை அடைந்துள்ள மாற்றங்களை விளக்குவதை நோக்கமாகக் கொண்டு அனுபவமும் புலமையும் மிக்க பல ஓதுவாமூர்த்திகளையும், இசைவல்லுநர்களையும், தமிழ் அறிஞர்களையும் ஆராய்ச்சியாளர்களையும் அழைத்து 1949-ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதொறும் டிசம்பர் மாதம் 22, 23, 24, 25 தேதிகளில் பண் ஆரய்ச்சிக் கூட்டத்தினை ஏற்பாடு செய்து வருகிறது.

சிலப்பதிகார உரையில் 11991 பண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. பஞ்ச மரபு, பிங்கல நிகண்டு கூறும் 103 பண்களைத் தேவார திவ்வியப்பிரபந்தப் பாடல்களில் கூறப்படும் பண்களுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்வதுடன் தற்காலத்தில் இப்பண்களுக்கு இணையான இராகங்களைக் கண்டறிந்து அறிவிக்கும் பணியினை இப்பண்ணாராய்ச்சிக்குழு தன் தலையாய பணியாக மேற்கொண்டு வருகிறது

ஆராய்ச்சியில் நடைபெறும் உரைகள், விளக்கங்கள் - கேள்விகள், மறுப்புகள், ஒப்புதல் போன்ற அனைத்தும் பதிவு செய்யப்பெற்று அறிக்கை வடிவில் வெளிவரச் செய்து வருகிறது. இவ் அறிக்கைகள் ஆராய்ச்சிக் கூட்டத்தில் பங்குபெறும் அத்தனை பேருக்கும் இலவசமாக வழங்கப் பெறுகிறது.

இதுவரை நடைபெற்ற பண் ஆராய்ச்சிக் கூட்டங்களின் வாயிலாகப் பின்வரும் பண்கள் ஆய்வு செய்யப்பட்டு அவற்றிற்கு இணையான இராகங்கள் எவை எனப் பின்வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளன.

 
வ.எண். பண்களின் பெயர்கள் இணையான இராகம்
1. பஞ்சமம் ஆகிரி
2. புறநீர்மை பூபாளம்
3. அந்தாளிக்குறிஞ்சி சாமா
4. காந்தாரபஞ்சமம் கேதார கெளளை
5. தக்கேசி காம்போதி
6. செவ்வழி எதுகுல காம்போதி
7. வியாழக் குறிஞ்சி செளராஷ்டிரம்
8. சீகாமரம் நாதநாமக்கிரியை
9. கெளசிகம் பைரவி
10. செந்துருத்தி மத்யமாவதி
11. பழம் பஞ்சுரம் சங்கராபரணம்
12. கொல்லி நவரோசு
13. கொல்லிக்கெளவாணம் நவரோசு
14. காந்தாரம் நவரோசு
15. பியந்தைக்காந்தாரம் நவரோசு
16. மேகராகக் குறிஞ்சி நீலாம்பரி
17. சாதாரி பந்துவராளி
18. நட்ட ராகம் பந்துவாராளி
19. தக்கராகம் ஆரபி
20. பழந்தக்கராகம் சுத்த சாவேரி
21. இந்தளம் மாயாமாளவ கெளளை
22. நட்டபாடை கம்பீர நாட்டை
23. யாழ்முரி அடாணா
25. பாலையாழ் அரிகாம்போதி
26. வேளாவளி வேளாவளி
27. சீராகம் ஸ்ரீராகம்
28. மலகரி மலகரி
29. நாராயணி நாராயணி
30. பைரவம் பைரவம்
31. வராடி வராளி
32. தனாசி தன்யாசி
33. ராமக்ரி ராமக்கிரியா
34. படுமலை நடபைரவி
35. முல்லை மோகனம்
36. மருதயாழ் கரகரப்பிரியா
37. செவ்வழியாழ் தோடி
38. கௌடி கௌரி
39. பாடை பாடி
40. குச்சரி(கூர்ஐரி) கூர்ச்சரி
41. நாகத்தொனி நாகத்தொனி
42. பெளரி பெளளி
43. சாயரி சாவேரி
44. கேதாளிக்குறிஞ்சி கேதாரம்
45. உதயகிரி ரேவகுப்தி
46. நாகராகம் நாகசுராவளி
47. சூர்துங்கராகம் சூரியகாந்தம்
48. மேகராகம் கோகிலப்பிரியா
49. சீகண்டி சிகண்டி
வ.எண். பண்களின் பெயர்கள் இணையான இராகம்
50. சாயர்வேளர்கொல்லி சரசாங்கி
51. மன்றல் நாட்டைக்குறிஞ்சி
52. அந்தி வசந்தா
53. சந்தி பூர்விகல்யாணி
54. சுருதிகாந்தாரம் காந்தருவமனோகரி
55. பாக்கழி பாலசந்திரிகா
56. வியந்தம் விலாசினி
57. ஆநந்தை போகவசந்தம்
58. மருள் கோகிலானந்தி
59. சாரல் ரத்னகாந்தி
60. குறிஞ்சியாழ் நடபைரவி
61. மண்டலியாழ் சாருகேசி
62. தணுக்காஞ்சி தேனுகா
63. தத்தளபஞ்சமம் மாளவபஞ்சமம்
64. திராடம் திருமூர்த்தி
65. வேளர்க்கொல்லி ரீதிசந்திரிகா
66. கின்னராகம் கீரவாணி
67. நிருபதுங்கராகம் சண்முகப்ரியா
68. தாரப்பண்டிறம் மேசகல்யாணி
69. தேவதாளி சுபபந்துவராளி
70. செந்து சக்கரவாகம்
71. ஆசாரி வகுளாபரணம்
72. தாணு தாமரசீ
73. விபஞ்சி மலய மாருதம்
74. சீவனி சீவணி- ஸ்ரீமணி
75. காஞ்சி மேகாஞ்சி - காஞ்சனாவதி
76. சதாக்கியம் ஸ்ரீமஞ்சரி
77. வருணம் தக்கணாதி - வசந்தா
78. யாமை அக்னி கோபம்
79. மல்லாரி கம்பீரநாட்டை
80. புங்காளி கலாவதி
81. செருந்தி புதரஞ்சனி
82. அழுங்கு மனோகரி
83. சாயை ஜயந்தசேனா
84. சோகவராடி அம்ருத தன்யாசி
85. தீபவராடி கன்னட மாருவ
86. பெரியவராடி கன்னட சாளவி
87. ஆரியவேளர் கொல்லி சலனவராளி
88. சித்திரவேளர் கொல்லி ஆபோகி
89. நாணுப்பஞ்சமம் அம்சவிநோதினி
90. தேசாக்ரி ரஞ்சனி
91. மாளவக்ரி இந்தோளம்
92. ஆரியகுச்சரி அமிர்தவர்ஷினி
93. சாவகக் குறிஞ்சி முக்திதாயினி
94. முதிர்ந்த குறிஞ்சி சுத்த தன்யாசி
95. பையுள்காஞ்சி யோகினி
96. கொண்டற்கிரி கன்னகௌளை
97. அனுத்திரபஞ்சமம் கமலா
98. அந்தாளிப்பாடை பஹுதாரி