தமிழ் இசைச் சங்கம்

தமிழ் இசையினை என்றும் வளர்க்கும் நிலையான நிறுவனமாகத் தமிழ் இசைச் சங்கமானது சென்னையில், 1943 ஆம் ஆண்டு, மே திங்களில் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் அவர்களால் துவங்கப்பட்டது. தமிழ் இசை வளர்ச்சிக்கும், தமிழ்ப் பண்பாட்டு வளர்ச்சிக்கும், இசை மேதைகளை ஒருங்கிணைக்கும் சங்கமாகவும், இசை வல்லுநர்களை உருவாக்கும் கல்லூரியாகவும் தமிழ் இசைச் சங்கமானது விளங்கி வருகின்றது.

Tamil Isai Sangam

தமிழ்ப் பண் ஆராய்ச்சியில் பெரும் பங்கினை தான் தம் பெரும் தமிழ்ச் சேவையால் தக்கவைத்துக் கொண்டுள்ளது. தமிழ்ப் பேரறிஞர்களை கெளரவப்படுத்தும் விருதான இசைப்பேரறிஞர் விருதை வழங்கி பெரும் இசைக் கலைஞர்களை கௌரவித்து வருகிறது. ஆண்டுதோறும் இசை ஆராய்ச்சிக் கூட்டங்களை நடத்தி அதன் மூலம் பல அரிய தமிழ் இசைச் செய்திகளை நாட்டிற்கு அளித்து வருகின்றது.

பண்டைய இசைக் கருவிகளின் தொகுப்புகளையும், அக்கருவிகளையும் பாதுகாப்பாக இன்றும் சேகரித்து வைத்துள்ளது. இதன் பொக்கிஷமாக விளங்கக் கூடிய பல அரிய தமிழ் இசை நூல்களின் சுரங்கமாகவும் விளங்கி வருகின்றது. பல இசைக் கலைஞர்கள் மற்றும் அறிஞர்களின் நூல்கள், தமிழ் இசைச் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ் இசைக் கல்லூரியானது தமிழ் இசைச் சங்கத்தின் பெரும் பணிகளுள் ஒன்றாகும். காலை நேர மற்றும் மாலை நேர இசை வகுப்புகளை குறைந்த கட்டணத்தில் நடத்தி பல இசைக் கலைஞர்களை உருவாக்கி வருகின்றது. அரசு அங்கீகாரம் பெற்ற பட்டயங்களை தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஆண்டு தோறும் வழங்கி மேன்மை படுத்தி வருகின்றது.