1943 ஆம் ஆண்டு தமிழ் இசைச் சங்கத்தின் தமிழ் இசை விழாத் தொடங்கியது. கடந்த 78 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆண்டுதோறும் இசை விழா நடைபெற்று வருகின்றது. அண்ணாமலை அரசரின் விருப்பத்திற்கேற்ப தமிழ் இசைச் சங்கத்தில் கலைஞர்கள் தமிழ்ப் பாடல்களையே பாடி வருகின்றனர். எம். எம். தண்டபாணி தேசிகர், எம்.எஸ். சுப்புலட்சுமி, செம்மங்குடி சீனிவாச அய்யர், அரியக்குடி இராமநுஜ அய்யங்கார், எம்.எல். வசந்தகுமாரி, பாலசரசுவதி, ஹேமாவதி, வைசயந்திமாலா, பத்மினி, பத்மா சுப்ரமணியம் போன்ற நாட்டியக் கலைஞர்களும், மதுரை சோமு, சீர்காழி கோவிந்தராசன் போன்ற வாய்ப்பாட்டு கலைஞர்களும், கும்பகோணம் இராசமாணிக்கம் பிள்ளை, கோவிந்தசாமிப்பிள்ளை, வீருசாமிப் பிள்ளை, நாமகிரி பேட்டை, கிருஷ்ணன், ஷேக் சின்ன மெளளானா, லால்குடி செயராமன், குன்னக்குடி வைதியநாதன், வளையப்பட்டி சுப்பிரமணியம், முருக பூபதி, திருவீழிமலை நடராச சுந்தரம் பிள்ளை, சுப்பிரமணியம் பிள்ளை போன்ற கருவியிசைக் கலைஞர்களும் பங்கேற்றுச் சிறப்பித்துள்ளனர். 1949ஆம் ஆண்டு முதல் பண் ஆராய்ச்சி அரங்கம் தொடங்கப் பெற்று ஆண்டுதோறும் ஆய்வுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இக்காலத்தில் வழங்கி வரும் இராகங்களுக்குப் பழம் பண் எது என்று கண்டறியும் முயற்சி மிகச் சிறப்பாக நிகழ்ந்து வருவது அனைவரும் நினைவுக் கொள்ளத் தக்கதாகும். இசைத் துறையில் மேதைமை மிக்க கலைஞர்களுக்கு ‘இசைப் பேரறிஞர்‘ பட்டம் வழங்கி சிறப்பு செய்து வருகிறது தமிழ் இசைச் சங்கம். 2009ஆம் ஆண்டு முதல் பண் இசைக் கலைஞர்களாகத் திகழும் ஓதுவார் மூர்த்திகளில் சிறந்தோர்க்குப் ‘பண் இசைப் பேரறிஞர்‘ பட்டம் வழங்கிச் சிறப்பிப்பதும் குறிப்பிடத்தக்கதாகும். தமிழ் இசைச் சங்கத்தின் தொடர் முயற்சியால் இன்று தமிழகம் எங்கும் தமிழில் பாடும் நிலை உருவாகி வருவது மகிழ்ச்சிக்கு உரிய நிகழ்வாகும்.